Download App

திமுகவின் 8,000 ரூபாய் கூப்பன் அறிவிப்பின் முக்கியத்துவம் என்ன?

சித்திரை 11, 2026 Published by premkumar6c8c7c1bc8

திமுகவின் தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. தற்போது வழங்கிவரும் நலத்திட்டங்களை விரிவுபடுத்தியும் பல புதிய வாக்குறுதிகளும் அறிவிக்கப்பட்டுள்ளன. வீட்டு உபயோகப் பொருட்கள் வாங்குவதற்கு 8000 ரூபாய் மதிப்புள்ள கூப்பன் வழங்கப்படும் என்ற அறிவிப்பு மக்களின் வரவேற்பைப் பெற்றுள்ளது. இதற்கு முக்கியமான காரணம் திமுக மீதான நம்பகத்தன்மை. ஏற்கனவே 5000 ரூபாய் வழங்கப்பட்டிருப்பதால் திமுக சொன்னால் செய்யும் என்கிற நம்பிக்கை மக்களிடம் இருக்கிறது என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள்.

பொதுவாக அரசு ஒரு பொருளை வாங்கித் தருகிறது என்றால், அதன் தரக் குறைபாடு, ஊழல் புகார், கட்சிக்காரர்களுக்கு மட்டுமே முன்னுரிமை போன்ற விமர்சனங்கள் எழும். இந்தக் கூப்பன் முறை மக்கள் தங்களுக்குப் பிடித்த பிராண்டை, விருப்பமான கடைகளில் வாங்கவும், தங்களுக்கு அருகில் உள்ள கடைகளில் வாங்கும்போது உள்ளூர் வியாபாரிகளுக்கு பெரிய அளவில் ஊக்கம் கிடைக்கவும் வழிவகை செய்வதாகக் கருதப்படுகிறது. கூப்பன்களை ஒருவர் மற்றவரிடம் விற்கமுடியாதபடி வடிவமைக்கவேண்டும் என்று எச்சரிக்கின்றனர் சமூக ஆர்வலர்கள்.

ஒரு திட்டம் மக்களை வெறும் பயனாளிகளாக மட்டும் மாற்றுகிறதா அல்லது பங்கேற்பாளர்களாக மாற்றுகிறதா என்பதுதான் முக்கியம். உதாரணமாக, இலவச ஆடு-மாடு வழங்கும் திட்டம் ஒரு பெண்ணை சிறு தொழிலதிபராக, அதாவது பொருளாதாரத்தில் பங்கேற்பாளராக மாற்றுகிறது. அதேபோலத்தான் இந்த கூப்பன் முறையும் உள்ளூர் பொருளாதாரத்தைப் பலப்படுத்தும். அது மக்களைப் பங்கேற்பாளர்களாக மாற்றும். இது ஒரு கிரியேட்டிவ் ஆன அணுகுமுறை என்கின்றனர் மூத்த அரசியல் விமர்சகர்கள்.

கட்டணமில்லாப் பேருந்து பயணம் பெண்களுக்கு மாதம் ஏறத்தாழ 900 ரூபாய் வரை சேமிப்பைத் தருவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. வாஷிங் மெஷின் போன்ற கருவிகள் பெண்களின் கடினமான வீட்டு வேலைகளைக் குறைக்கும். இதன் மூலம் பெண்களுக்குக் கூடுதல் நேரம் கிடைக்கும். அந்த நேரத்தைப் பெண்கள் தங்கள் கல்விக்கோ அல்லது சிறு தொழில் செய்து சம்பாதிப்பதற்கோ பயன்படுத்தி, பொருளாதார ரீதியாக முன்னேற வழிவகுக்கும் என்று கருதப்படுகிறது.

தமிழ்நாடு 40,000-க்கும் மேற்பட்ட தொழிற்சாலைகளுடன் இந்தியாவில் முதலிடத்தில் உள்ளது. கிரைண்டர், மிக்ஸி போன்ற பொருட்களின் விற்பனைத் தேவை அதிகரிக்கும். இது தமிழ்நாட்டின் உற்பத்தித் துறைக்கும், சிறிய மற்றும் நடுத்தரக் கடைக்காரர்களுக்கும் பெரிய அளவில் லாபத்தைத் தரும் என்கின்றனர் பொருளாதார நிபுணர்கள்.

கலைஞர் கனவு இல்லம் போன்ற திட்டங்கள் வீட்டை உறுதி செய்வது போல, ஃபிரிட்ஜ், வாஷிங் மெஷின் போன்ற பொருட்கள் உணவைச் சேமித்து வைக்க, உடலுழைப்பைக் குறைக்க, நேரத்தைச் சேமிக்க என சாமானிய மக்களின் ஒட்டுமொத்த வாழ்க்கைத்தரத்தை அடுத்த நிலைக்குக் கொண்டு செல்லும்.

பெண்கள் சம்பளம் பெறுவது என்பது வெறும் தனிநபர் வருமானம் மட்டுமல்ல, அது ஒட்டுமொத்த குடும்பத்தின் கல்வி மற்றும் பொருளாதார வளர்ச்சியையும் உயர்த்தும். வாஷிங் மெஷின் போன்ற கருவிகள் பெண்களின் நேரத்தைச் சேமிக்கும். சேமிக்கப்படும் நேரத்தைத் தொழிற்சாலைகளில் அதிக உற்பத்தித் திறனுடன் பணிபுரியவோ அல்லது ஓய்வு எடுக்கவோ அவர்கள் பயன்படுத்த முடியும். இது ஏற்கனவே 40.5% ஆக உயர்ந்துள்ள பெண் வேலைவாய்ப்பு விகிதத்தை மேலும் வலுப்படுத்தும்.

மேலும் இந்தியாவிலேயே தமிழ்நாட்டில் தான் மிக அதிகமான பெண் தொழிலாளர்கள் உள்ளனர். நாட்டின் மொத்தப் பெண் தொழிலாளர்களில் 42% பேர் அதாவது சுமார் 6.3 லட்சம் பேர் தமிழ்நாட்டுத் தொழிற்சாலைகளில் மட்டுமே பணிபுரிகின்றனர். வீட்டில் பணிச்சுமை குறைவதால், தொழிற்சாலைகளில் பெண்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்கின்றனர் பொருளாதார ஆய்வாளர்கள்.

மகளிர் உரிமைத் தொகை எப்படி மக்களின் வாங்கும் திறனை அதிகரித்ததோ, அதேபோல இந்த கூப்பன்களும் சந்தையில் பணப்புழக்கத்தை அதிகப்படுத்தும். இது சாதாரண மக்களின் பொருளாதார நிலையை உயர்த்தி, தமிழ்நாட்டின் தற்போதைய 11.19% பொருளாதார வளர்ச்சியை மேலும் வேகப்படுத்தும்.

தமிழ்நாடு மின்னணுப் பொருட்கள் மற்றும் மோட்டார் வாகன உற்பத்தியில் இந்தியாவிலேயே முதலிடத்தில் உள்ளது. அரசு இத்தகைய கூப்பன்களை வழங்கினால், அந்தப் பொருட்கள் தமிழ்நாட்டிலேயே உற்பத்தியாவதால் உள்நாட்டுத் தொழிற்சாலைகளுக்கு அதிக வாய்ப்புகள் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மக்களை வெறும் பயனாளிகளாகப் பார்க்காமல், பொருளாதாரத்தின் பங்கேற்பாளர்களாக மாற்ற திராவிட மாடல் அரசு பல்வேறு திட்டங்களை அறிமுகப் படுத்தியுள்ளது. அந்த வகையில் 8,000 ரூபாய் மதிப்பிலான கூப்பன் முறை உள்ளூர் வணிகத்தையும் உற்பத்தித் துறையையும் வலுப்படுத்துவதுடன் வீட்டு வேலைகளை எளிதாக்கும் கருவிகள் பெண்களுக்குக் கூடுதல் நேரத்தை உருவாக்கித் தரும். ஏற்கனவே 42% ஆக உள்ள தமிழ்நாட்டின் பெண் தொழிலாளர் பங்களிப்பு அதிகரித்து, ஒட்டுமொத்தப் பொருளாதாரமும் அடுத்த நிலையை எட்டும் என்கின்றனர் திமுக நிர்வாகிகள்.

More News