சடல விற்பனை செய்த சட்டவிரோதிகள் கைது!
வைகாசி 27, 2025 Published by anbuselvid8bbe9c60f
ஹார்வர்ட் மருத்துவப் பள்ளியின் முன்னாள் சவக்கிடங்கு மேலாளர் ஒருவர் கைகள், கால்கள் மற்றும் தலைகள் உள்ளிட்ட மனித உடல் பாகங்களைத் திருடி விற்பனை செய்ததாக ஒப்புக் கொண்டார்.
நியூ ஹாம்ப்ஷையரின் கோஃப்ஸ்டவுனைச் சேர்ந்த 57 வயதான செட்ரிக் லாட்ஜ் என்னும் சவக்கிடங்கு மேலாளர், பென்சில்வேனியாவில் திருடப்பட்ட மனித உடல் பாகங்களை அண்டை மாநிலத்திற்குக் கொண்டு சென்று விற்ற குற்றத்தை ஒப்புக்கொண்டார். அவருக்கு 10 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை வழங்கப் படலாம் என்று தெரிகிறது.
2018 முதல் மார்ச் 2020 வரை பாஸ்டனில் உள்ள சவக்கிடங்கில் இருந்து மனித உறுப்புகள் திருடப்பட்டதாக புகார்கள் எழுந்த நிலையில், ஹார்வர்டிலும், ஆர்கன்சாஸில் உள்ள சவக்கிடங்குகளிலிருந்து திருடப்பட்ட மனித உறுப்புகளை வாங்கி விற்கும் நாடு தழுவிய ஒரு நெட்வொர்க்கின் ஒரு பகுதியாக செயலப்ட்ட செட்ரிக் லாட்ஜ், அவரது மனைவி உள்பட பலர் பிடிபட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பொதுவாக, ஹார்வர்ட் மருத்துவப் பள்ளிக்கு நன்கொடையாக அளிக்கப்படும் சடலங்கள் கற்பித்தல் அல்லது ஆராய்ச்சிகளுக்காக பயன்படுத்தப்படுகின்றன. தேவை முடிந்த பின், சடலங்கள் வழக்கமாக தகனம் செய்யப்பட்டு, சாம்பல் நன்கொடையாளரின் குடும்பத்திற்குத் திருப்பித் தரப்படுகிறது அல்லது ஒரு கல்லறையில் புதைக்கப்படுகிறது.
ஆனால், இந்த சடலங்களிலிருந்து மனித உறுப்புகளை வெட்டியெடுக்கும் இந்த சட்டவிரோதிகள் அவற்றை விஞ்ஞானிகள், அறுவை சிகிச்சை உபகரண நிறுவனங்கள், திசு வங்கிகள், மருந்து நிறுவனங்கள், மருத்துவக் கல்லூரிகள் மற்றும் ஆராய்ச்சியாளர்களுக்கு விற்பனை செய்கிறார்கள்.
இந்த வழக்குகளில் குற்றஞ்சாட்டப்பட்ட செட்ரிக் லாட்ஜின் மனைவி டெனிஸ் லாட்ஜும், இன்னும் பலரும் தங்கள் மீது வைக்கப் பட்ட குற்றங்களை ஒப்புக்கொண்டனர். இரண்டு டஜன் கைகள், இரண்டு பாதங்கள், ஒன்பது முதுகெலும்புகள், மண்டை ஓடுகளின் பகுதிகள், ஐந்து துண்டிக்கப்பட்ட மனித முகங்கள் மற்றும் இரண்டு துண்டிக்கப்பட்ட தலைகள் உள்ளிட்ட பல பொருட்களை இணையதளத்தில் விற்பனை செய்ய அவர் பேச்சுவார்த்தை நடத்தியதாக வழக்குரைஞர்கள் தெரிவித்துள்ளனர்.
கல்லூரிகளுக்கு நன்கொடையாக வழங்கப்பட்ட சடலங்களிலிருந்து துண்டிக்கப் பட்ட சில உடல் பகுதிகள் தொடர்புடைய கல்லூரிகளின் அனுமதியின்றி எடுக்கப் பட்டதாகவும் தெரியவந்துள்ளது.
இந்த வழக்கு நீதி மன்றத்தில் தொடர்கிறது.












