Download App

மேஜிக் நிபுணர்களையே மிரள வைத்த பெண் ஸோஃபி லாயிட்!

ஆனி 1, 2025 Published by anbuselvid8bbe9c60f

இங்கிலாந்தில் மேஜிக் சர்க்கிள் என்ற  க்ளப்பில் பெண் மேஜிக் நிபுணர்களை உறுப்பினர்களாக ஏற்றுக் கொள்ளாத காலம் அது. 1991 ஆம் ஆண்டு ஆண் வேடமிட்டு ஏமாற்றுவித்தையில் பேர் போன மேஜிக் நிபுணர்களையே ஏமாற்றி க்ளப்பின் உறுப்பினராகி சான்றிதழும் பெற்ற ஸோஃபி லாயிட்  என்ற பெண் உண்மையைச் சொன்ன போது, வெளியே அனுப்பப் பட்டார். சென்ற வருடம் அதே மேஜிக் சர்க்கிள் ஸோஃபி லாயிடை தேடி கண்டுபிடித்து அவரை வரவழைத்து மன்னிப்புக் கேட்டு கௌரவப்படுத்தியது. 
மேஜிக் நிபுணர்கள் தங்கள் இரகசியங்களை வெளிப்படுத்துவதே இல்லை. ஆனால், சிலசமயங்களில் செய்த தவறுகளை ஒத்துக் கொள்கிறார்கள். பெண்களால் இரகசியங்களைக் காப்பாற்ற முடியாது என்ற பிற்போக்கு சிந்தனையுடன் பெண்மேஜிக் நிபுணர்களை உறுப்பினர்களாக ஏற்க மறுத்த அந்த க்ளப்பில் சேர மிகவும் விரும்பினார், ஸோஃபியின் தோழியான மேஜிக் நிபுணர் ஜெனிஃபெர் வின்ஸ்டான்லி.
சிறுவேடங்கள் ஏற்று நடிக்கும் அனுபவம் உள்ள ஸோஃபியை அவர் ஆண் வேடத்தில் க்ளப்பில் உறுப்பினராக்க நினைத்த போது, ஸோஃபி தயக்கத்துடன் ஒப்புக் கொண்டார். அடுத்த 18 மாதங்களில் ஜெனிஃபெர், ஸோஃபிக்கு பலவிதமான மேஜிக் வித்தைகளை கற்றுக் கொடுத்து அவரை ஒரு டீன் ஏஜ் இளைஞனைப் போல நடந்து கொள்ள பயிற்சியும் அளித்தார்.
 “ரேமண்ட் லாயிட்” என்ற பெயரில், கைகளில் வெள்ளைநிற  கையுறைகளுடன் ஆண் வேடத்தில் க்ளப் உறுப்பினர் தேர்வில் கலந்து கொண்டு வெற்றி பெற்று சான்றிதழையும் வாங்கி விட்டார் ஸோஃபி. ஜெனிஃபெரின் மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. ஆனால், அந்த ஆண்டின் இறுதியிலேயே க்ளப், பெண் உறுப்பினர்களை சேர்த்துக் கொள்ள தீர்மானித்த போது. ஸோஃபி தான் செய்த ஆள்மாறாட்டத்தைப் பற்றி உறுப்பினர்களிடம் சொல்கிறார். அது வேடிக்கையாகக் எண்ணப்படும் என்று எதிர்பார்த்த அவருக்கு பெரிய அதிர்ச்சி. ”ஏமாற்றுக்காரி” என்ற நிந்தனையுடன் க்ளப்பிலிருந்து வெளியேற்றப்படுகிறார். இதில் அதிக மனவேதைக்குள்ளானது ஜெனிஃபெர் தான். தோழிகள் இருவரும் அந்த நிகழ்ச்சியை மறக்கவே மிகவும் சிரமப்பட்டனர். 

காலங்கள் உருண்டோடி விட்டன. கடந்த ஆண்டு பிரிட்டிஷ் மேஜிக் க்ளப், ஸோஃபி லாயிடைத் தேடி தன் தவறை ஒத்துக் கொள்ள தீர்மானித்தது. தற்போது ஸ்பெயினில் வசிக்கும் ஸோஃபி, மேஜிக் க்ளப் தன்னைத் தேடுகிறது என்று அறிந்த போது, தொடர்பு கொள்ள விரும்பவில்லை. மௌனமாக இருந்து விட நினைத்தார். பழைய மனக்காயங்கள் மேலெழும்ப 20 வருடங்களுக்கு முன்பே மறைந்து விட்ட தோழியின் நினைவில் மூழ்கிவிட்டார், ஸோஃபி.
அப்போது தான், அது ஜெனிஃபெரின் கனவு என்பது அவருக்கு உறைத்தது. தோழியின் கனவுக்காக அவரது மன நிறைவுக்காக இந்த விழாவில் கலந்து கொள்ள தீர்மானித்தார் ஸோஃபி. 
மேஜிக் க்ளப்பின் இப்போதைய தலைவர், லாரா ,லண்டன் அவரைத் தொடர்பு கொண்டு மதிய உணவுக்கு அழைத்தார். இரண் டு மணிநேர விருந்து ஏழு மணிநேரம் வரை நீடித்தது.” அது ஒரு  நனவான கனவு” என்று வருணித்த லாரா லண்டன், மேஜிக் க்ளப்பின் சார்பாக தமது முதல் முன்னோடியிடம் மன்னிப்புக் கேட்க தாம் வெகு காலம் காத்திருந்ததாகத் தெரிவித்தார். 
ஸோஃபி லாயிட் திரும்பவும் க்ளப்பில் உறுப்பினராகச் சேர்ந்தார்.. ஜெனிஃபெர் வின்ஸ்டான்லிக்கு அளிக்கப் பட்ட விருதை அவரது பேத்தி 27 வயதான சார்லெட் ஆலன் அவரது சார்பில் பெற்றுக் கொண்டார்.
“என் பாட்டிக்கும், அவரது தோழி ஸோஃபி லாயிடுக்கும் கிடைத்த அங்கீகாரம் தாமதம் ஆனாலும், மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது” என்றார் சார்லெட். 

More News

Trending Now

No trending articles in this category from the last 3 days.