பராசக்தி படத்திற்கு தடை இல்லை: ஜனவரி 10-ல் திட்டமிட்டபடி ரிலீஸ் – சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
தை 2, 2026 Published by Natarajan Karuppiah

சிவகார்த்திகேயன் நடிப்பில், சுதா கொங்கரா இயக்கத்தில் பெரும் எதிர்பார்ப்புகளுக்கிடையே உருவாகியுள்ள ‘பராசக்தி’ திரைப்படத்தின் வெளியீட்டிற்குத் தடை விதிக்கக் கோரிய வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. இதனால், முன்னரே அறிவித்தபடி வரும் ஜனவரி 10, 2026 அன்று பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இப்படம் உலகம் முழுவதும் வெளியாகவுள்ளது.
வழக்கின் பின்னணி: உதவி இயக்குநரான கே.வி. ராஜேந்திரன் (எ) வருண் ராஜேந்திரன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், “1965-ம் ஆண்டு நடைபெற்ற இந்தி எதிர்ப்பு போராட்டத்தை மையமாக வைத்து ‘செம்மொழி’ என்ற பெயரில் நான் ஒரு கதையை எழுதி, 2010-ம் ஆண்டே தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்கத்தில் பதிவு செய்திருந்தேன். அந்தக் கதையை திருடி தற்போது ‘பராசக்தி’ என்ற பெயரில் படம் எடுத்துள்ளனர். எனவே, காப்புரிமை மீறல் அடிப்படையில் இப்படத்தை வெளியிடத் தடை விதிக்க வேண்டும்,” என்று கோரியிருந்தார்.
இந்த வழக்கு இன்று மாண்புமிகு நீதிபதி செந்தில் குமார் ராமமூர்த்தி அவர்கள் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.
மனுதாரர் தரப்பு வாதம்: தனது ‘செம்மொழி’ கதையும், ‘பராசக்தி’ கதையும் ஒன்றுதான் என்றும், எழுத்தாளர் சங்கத்தில் தான் அளித்த புகாருக்கு உரிய தீர்வு கிடைக்காததால் நீதிமன்றத்தை நாடியதாகவும் மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது.

இயக்குநர் சுதா கொங்கரா சார்பில் ஆஜரான வழக்கறிஞர் விஜயன் சுப்பிரமணியன் மற்றும் மூத்த வழக்கறிஞர் பி.எஸ்.ராமன் ஆகியோர், “இந்தக் குற்றச்சாட்டுகளுக்கு எவ்வித அடிப்படை ஆதாரமும் இல்லை. படம் வெளியாவதற்கு சில நாட்கள் முன்பாக வேண்டும் என்றே உள்நோக்கத்துடன் இந்த வழக்கு தொடரப்பட்டுள்ளது,” என்று வாதிட்டனர்.
தயாரிப்பு நிறுவனமான டான் பிக்சர்ஸ் (Dawn Pictures) சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் அரவிந்த் பாண்டியன், “பல கோடி ரூபாய் முதலீட்டில் தயாராகியுள்ள இப்படத்தை கடைசி நேரத்தில் தடுத்து நிறுத்தினால் பெரும் பொருளாதார இழப்பு ஏற்படும்,” என்று எடுத்துரைத்தார்.

அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதி செந்தில் குமார் ராமமூர்த்தி, படம் வெளியாவதை தடுக்க மறுத்துவிட்டார். மனுதாரர் தனது புகாரை நிரூபிக்க போதுமான ஆதாரங்களை சமர்ப்பிக்கவில்லை என்றும், கடைசி நேரத்தில் (Laches) நீதிமன்றத்தை அணுகியிருப்பதை ஏற்க முடியாது என்றும் கூறி, படத்தின் வெளியீட்டிற்கு இடைக்காலத் தடை விதிக்க மறுத்து உத்தரவிட்டார்.
நீதிமன்றத்தின் இந்த உத்தரவு சிவகார்த்திகேயன் ரசிகர்கள் மற்றும் படக்குழுவினரிடையே பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.



















