Download App

‘சிறை’ படத்தை உருக்கமாக பாராட்டிய இயக்குநர் சங்கர்: “நிறைய இடங்களில் கண்ணீர் வந்தது!”

மார்கழி 30, 2025 Published by anbuselvid8bbe9c60f

sirai2

விக்ரம் பிரபு மற்றும் அறிமுக நடிகர் எல்.கே. அக்ஷய் குமார் நடிப்பில், கடந்த டிசம்பர் 25-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்று ஓடிக்கொண்டிருக்கும் ‘சிறை’ திரைப்படத்தை புகழ்பெற்ற இயக்குநர் சங்கர் பாராட்டியுள்ளார்.

‘டாணாக்காரன்’ பட இயக்குநர் தமிழ் எழுதிய கதையை, அறிமுக இயக்குநர் சுரேஷ் ராஜகுமாரி இயக்கியுள்ள இப்படத்தை ‘7 ஸ்க்ரீன் ஸ்டுடியோ’ தயாரிப்பாளர் லலித் குமார் தயாரித்துள்ளார். படத்தில் விக்ரம் பிரபு, எல்.கே. அக்ஷய் குமார், அனிஷ்மா அனில்குமார் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர்.

இந்நிலையில், இயக்குநர் சங்கர் தனது எக்ஸ் (ட்விட்டர்) பக்கத்தில் ‘சிறை’ படத்தைப் பற்றி நெகிழ்ச்சியாக பதிவிட்டுள்ளார். அவரது பதிவில்,

sirai1

“‘சிறை’ உண்மையிலேயே ஒரு சிறந்த படம். நிறைய இடங்களில் கண்ணீர் சிந்தினேன். படத்தில் வரும் ஒவ்வொரு கதாபாத்திரமும், அவற்றில் நடித்த நடிகர்களின் நடிப்பும் படம் முடிந்த பிறகும் மனதில் நீங்காமல் நிலைத்து நின்றன.

விக்ரம் தனது நடிப்பால் தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறார். அக்ஷய் குமார், அனிஷ்மா அனில்குமார் ஆகியோரின் நடிப்பு அவர்களது கதாபாத்திரங்களின் அப்பாவித்தனத்தையும் உணர்வுகளையும் அழகாகப் பிரதிபலித்தது.

இந்த அருமையான படத்தை நமக்கு வழங்கிய தயாரிப்பாளர் லலித்குமார் அவர்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துகள். இயக்குநர் சுரேஷ் தனது முதல் படத்திலேயே நம் மனங்களை ‘சிறை’ பிடித்துவிட்டார்.

sirai

இறுதிக்காட்சியில் சொல்லப்பட்ட செய்தி மிகவும் வலுவானதாகவும், இன்றைய காலத்திற்கு மிகவும் பொருத்தமானதாகவும் இருந்தது” என்று குறிப்பிட்டுள்ளார்.

‘சிறை’ படம் உண்மை சம்பவத்தை தழுவி எடுக்கப்பட்டுள்ளதாகவும், போலீஸ் அதிகாரியும் கைதியும் இடையேயான பயணத்தில் நடக்கும் உணர்வுப்பூர்வமான சம்பவங்களை மையப்படுத்தியுள்ளதாகவும் விமர்சகர்களால் பாராட்டப்பட்டு வருகிறது. இயக்குநர் சங்கரின் இந்த பாராட்டு படக்குழுவினருக்கு மேலும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Trending Now