அந்தோணி திரை விமர்சனம்
Published பங்குனி 14, 2026 by Natarajan Karuppiah

ஈழத்தின் இன்னொரு முகம் இந்த “அந்தோணி”!
.ஓசை பிலிம்ஸ் தயாரிப்பில் இரட்டை இயக்குனர்கள் சுகிர்தன் சிரிதுராஜா மற்றும் ஜீனோசன் ராஜேஷ்வர் இயக்கத்தில் இளையராஜா இசையில், ‘கயல் ‘ வின்சென்ட், டிஜே பானு, சுதர்சன் ரவீந்திரன், அருள்தாஸ், ‘ நிழல்கள் ‘ ரவி உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியாகியிருக்கும் படம் ” அந்தோணி” .
இதுவரையிலும் இலங்கையின் யுத்த களத்தை மட்டுமே சினிமாவில் பார்த்திருக்கிறோம். மாறாக போருக்குப் பிறகான இலங்கையின் கடற்கரை கிராமம் ஒன்று, அங்கே குடியிருக்கும் மீனவர்களை சுற்றி நிகழும் கதை. ஒரு தேவாலயம் அதை சுற்றி வாழும் எளிமையான மக்கள் அவர்களின் வாழ்வியல் என செல்லும் கதையில் அந்த ஊரில் மிகவும் நல்லவராக இருக்கிறார் அந்தோணி . எந்தப் படகும் எந்தக் கடலும் அவர் சொல்பேச்சு கேட்கும். எனினும் அவருக்கென யாரும் கிடையாது. தனிமையான அந்தோணியின் ( கயல் வின்சென்ட்) வாழ்க்கையில் வரமாக கடலில் இருந்து முத்து போல் கிடைக்கிறார் நளினி ( டி. ஜே.பானு) . கடலில் மூழ்கிக் கொண்டிருந்தவரை காப்பாற்றி மீட்டுக் கொண்டு வருகிறார் அந்தோணி. இருவருக்குமே யாரும் இல்லாத நிலை, ஒருவருக்கொருவர் உயிருக்கு உயிராக நேசித்து வாழ்க்கையை தொடங்குகிறார்கள். அவர்களுக்கு உலகமாக ஒரு பெண் குழந்தை. எல்லாம் நன்றாகத்தான் போய்க் கொண்டிருக்கிறது. திடீரென அவர்களுக்கு பேரிடியாக வந்து சேருகிறது ஒரு பிரச்சனை. அது என்ன அதை எப்படி அந்தோணி குடும்பத்தினர் சமாளித்தனர் என்பது மீதிக் கதை.

ஈழத் தமிழர்கள் என்றாலே போர் மற்றும் யுத்தம் அதனால் வேலையில்லாமல் மற்றும் பற்றாக்குறை என அங்கே குற்றங்கள் தான் அதிகமாக இருக்கும் . ஒருவருக்கொருவர் காட்டிக்கொடுத்து , துரோகம் செய்வார்கள் என காலம் காலமாகவே சிங்களர்கள் எடுக்கும் போலியான திரைப்படங்களுக்கு இடையில் இந்தப் படம் உண்மையைப் பேசுகிறது. யுத்தத்திற்கு பிறகான மனிதர்களின் மனப்போராட்டங்களை மிக அற்புதமாக எடுத்து வைத்திருக்கிறது. 2009 ஆம் ஆண்டிற்கு பிறகு முள்ளிவாய்க்கால் பகுதி அங்கே கடலோரத்தில் இருக்கும் ஒரு மீனவ கூட்டம், அவர்கள் ஒருவருக்கு ஒருவர் கிடைத்த வேலையை செய்து கொண்டு எப்படி வாழ்க்கையை வாழ்கிறார்கள் என அமைதியாக காட்சிகளை எடுத்து வைக்கிறது திரைக்கதை. கதைக்குள் எந்த அரசியலையும் அல்லது தேவையற்ற வசனங்களையும் திணிக்காமல், அங்குள்ள மனிதர்களின் வாழ்வியலை மட்டும் எதார்த்தமாக காட்டியிருக்கிறார்கள் இரட்டை இயக்குனர்கள் சுகிர்தன் சிரிதுராஜா மற்றும் ஜீனோசன் ராஜேஷ்வர் .

திரைக்கதையின் ஆழத்திற்கு மேலும் உணர்வுகளை கூட்டி கொடுத்திருக்கிறார் இசைஞானி இளையராஜா. மெல்லிய இழையோடும் இசை நம் மனதை இன்னும் கனமாக்குகிறது. ரிஷி செல்வம் ஒளிப்பதிவில் இலங்கையின் கடற்கரை பரப்பு புது அழகுடன் காட்சி படுத்தப்பட்டிருக்கிறது. சுரேஷ் ஏ பிரசாத் எடிட்டிங், கதையை இரண்டு மணி நேரத்தில் சுருக்கமாக சொன்னாலும் எங்கேயும் அந்த உணர்வு எடிட் செய்யப்படவில்லை.
கச்சத்தீவு அழகின் பின்னணியில் கடல் தாயையும், மீன்களையும் மட்டுமே நம்பி இருக்கும் ஒரு மக்கள் இனத்தை கண்முன் காட்சிப்படுத்தி இருக்கிறார்கள் படக்குழு. அந்தோணியாக நடித்திருக்கும் கயல் வின்சென்ட் அதீத மகிழ்ச்சியும் தனக்கென ஒரு குடும்பமும் கிடைக்கும் போது முகத்தில் அவ்வளவு சந்தோஷத்தையும், அதே வாழ்வில் எதிர்பாராத விதமாக வரும் வலியும் இணைந்து இருவேறுபட்ட நடிப்பை மிக அற்புதமாக கொடுத்திருக்கிறார். ஆர்ப்பாட்டமே இல்லாமல் அவர் தவிக்கும் காட்சிகள், நம் கண்களை நனைக்கும்.

உயிரே போகப்போகிறது என நினைத்துக் கொண்டிருந்த வேளையில் ஒரு புது வாழ்க்கையை கிடைத்த சந்தோஷம், எதுவுமே இல்லாமல் உடல் மெலிந்து, தமிழ்நாட்டிலிருந்து கச்சத்தீவில் ஒதுங்கிய ஓர் அபலைப் பெண்ணாக டி. ஜே.பானு கதைக்கு பெரிய பலம். எவ்வித மேக்கப்பும் இல்லை, தேவையற்ற வசனங்கள் இல்லை, ஓரிரு வார்த்தைகள் பேசினாலும், கண்களில் அவ்வளவு உணர்வுகளை அவர் வெளிப்படுத்துகிறார்.

மனிதநேயத்துடன் கூட்டமாக வாழும் மற்ற நடிகர்களின் நடிப்பும் படத்திற்கு மேலும் பலம் சேர்த்திருக்கிறது. தேவாலய பாதிரியாராக வரும் நிழல்கள் ரவி, மீனவர்கள் சங்க தலைவராக வரும் அருள்தாஸ், ஒரு இளம் காதல் ஜோடி என கதை அழகும், அன்பும், ஆழமான உணர்வும் ஒருசேர நகர்கிறது. இதுவரை இலங்கை என்றாலே ரத்தமும் சதையுமாக பார்த்துப் பழகிய சினிமாவுக்கு இந்தப் படம் ஒரு புதுமை. பல காட்சிகள் ஈரானிய படங்களின் சாயலை ஒத்திருக்கிறது.
மொத்தத்தில் இலங்கை மற்றும் ஈழத் தமிழர்களின் போராட்டம் நிறைந்த வாழ்க்கையை எதார்த்தமாகவும் அமைதியாகவும் எடுத்து வைத்திருக்கிறது இந்த ” அந்தோணி ” திரைப்படம்.
Rating: 



(3.25/5)










