சீக்ரெட் ஸ்டோரீஸ்: ரோஸ்லின் திரை விமர்சனம்
Published பங்குனி 10, 2026 by Natarajan Karuppiah

ஒரு கனவு, ஒரு அழையா விருந்தாளி, பல ரகசியங்கள் – ‘சீக்ரெட் ஸ்டோரீஸ்: ரோஸ்லின்’
சுமேஷ் நந்தகுமார் இயக்கத்தில், மீனா , வினித், ஹிக்கிம் ஷா, சஞ்சனா தீபு, அனிஷ்மா அணில்குமார், நடித்திருக்கும் புதிய வெப் தொடர் ‘‘சீக்ரெட் ஸ்டோரீஸ்: ரோஸ்லின்’’. ‘த்ரிஷ்யம்‘ படப் புகழ் ஜீத்து ஜோசப்பின் தயாரிப்பில், பாடலாசிரியர் விநாயக் சசிகுமாரின் திரைக்கதையில் இந்தத் தொடர் ஜியோ ஹாட்ஸ்டார் தளத்தில் வெளியாகியுள்ளது.
ரோஸ்லினுக்கு (சஞ்சனா தீபு) திகிலான ஒரே கனவு அது தினம் தினம் வித்யாசமான வகையில் வந்துகொண்டே இருக்கிறது இதனால் உளவியல் ரீதியாக அழுத்தமும், மேலும் குழப்பத்திலும் இருக்கிறார். டீனேஜ் மகள் இப்படி மனவியல் ரீதியான பிரச்னையில் அகப்பட்டிருப்பது கண்டு வருத்தத்திலேயே இருக்கிறார்கள் பெற்றோர்களான சோபா ஜான் (மீனா), மற்றும் ஜான் (வினீத்). இதற்கிடையில் வீட்டிற்கு விருந்தினராக வருகிறார் ஜெர்ரி என்கிற ஜோமோன் ஸ்கரியா (ஹக்கிம் ஷா). குழப்பங்கள் மேலும் அதிகரிக்கிறது. மேலும் ஜெர்ரி வந்தது ரோஸ்லினுக்கு பிடிக்கவில்லை. அதற்கேற்ப ஜெர்ரியும் பல விசித்திரமான செயல்பாடுகளில் ஈடுபடுகிறார். ஜெர்ரியை விரட்ட பலவாறு முயற்சிக்கிறார் ரோஸ்லின். இப்படிப் போகும் திரைக்கதையில் ரோஸ்லினுக்கு ஏன் இவ்வளவு மனக்குழப்பம், யார் இந்த ஜெர்ரி என பல கேள்விகளுக்கு ஒவ்வொரு எபிசோடுகளாக பதில்கள் விரிகின்றன.

சஞ்சனா தீபுதான் கதைக்கு மிகப்பெரும் பலம். மைனர் பெண்ணும் அல்லாத, மேஜர் பெண்ணும் அல்லாத ஒரு தோற்றம் இக்கதைக்கு மிகப் பொருத்தமாக இருக்கிறார். அடுத்து மீனா முதல் முறையாக வித்யாசமான கோணத்தில் நடித்திருக்கிறார். அவருக்கு பலமாக வினீத் அவரும் அமைதியான தந்தைக்குள் மறைந்திருக்கும் ஒரு மர்ம மனிதர் சகிதமாக தொடர் முழுக்க நம்மை கேள்விகளால் நிரப்புகிறார். ரோஸ்லின் கதாபாத்திரம்தான் கதைக்கரு என்றாலும் கதை ஹக்கிம் ஷாவின் ஜெர்ரி கேரக்டர் மீதுதான் நகர்கிறது. அவருடைய தோற்றமும், நடிப்பும் இக்கதைக்கு அவசியமான ஒன்றாக மாறியிருக்கிறது.

சஞ்சனா பள்ளியில் படிக்கிறாரா, இல்லை கல்லூரியா போன்ற எவ்வித காட்சிகளும் இல்லாமல் இருப்பது அல்லது அதிக காட்சிகள் வீட்டிலேயே இருப்பதும் லாஜிக் மைனஸ். ஒரு சொத்து அதை சுற்றி நகரும் திகில் காட்சிகள், பரபரப்பு என எங்கும் தொய்வில்லாமல் கதையை நகர்த்தியிருக்கிறார்கள் இயக்குநர் சுமேஷ் நந்தகுமார் மற்றும் திரைக்கதை எழுத்தாளர் விநாயக் சசிகுமார்.
இம்மாதிரியான தொடருக்கு மிகப்பெரும் பலம் இடம் தேர்வும், அதன் காட்சியமைப்பும்தான். கேரளாவின் ஒரு அமைதி நிறைந்த திகில் பண்ணை வீட்டு சூழலுக்குள் நம்மையும் தொலைந்து போக வைத்திருக்கிறது பி.எம்.உன்னிகிருஷ்ணன் ஒளிப்பதிவு. விஷ்ணு ஷ்யாம் பின்னணி இசையும் விஷுவலுக்கு மேலும் வலு சேர்க்கிறது. ஒவ்வொரு எபிசோடும், எங்கேயும் தொய்வில்லாமல் நகர உதவுகிறது ரியாஸ் கே பாதர் எடிட்டிங். ஒரு சில ரிபீட் கனவுக் காட்சிகள் மேலும் எல்லாமே கனவாக முடிவதும் கொஞ்சம் சலிப்பு உண்டாக்குகின்றன.

மொத்தத்தில் ‘சீக்ரெட் ஸ்டோரீஸ்: ரோஸ்லின்’ வெப் தொடர் வலிமையான விஷுவல் மற்றும் பரபரப்பான ஃபேமிலி க்ரைம் கதையால் திகில் கதை விரும்பிகளிடம் முக்கிய இடம் பிடித்திருக்கிறது
Rating: 



(2.75/5)









