லீடர் திரை விமர்சனம்
Published சித்திரை 4, 2026 by Natarajan Karuppiah

மாஸ் , பிளாஸ்ட் ஆக்ஷன் பேக் – லீடர்
லெஜன்ட் சரவணா ஸ்டோர்ஸ் புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் ஆர்எஸ் துரை செந்தில்குமார் இயக்கத்தில் லெஜன்ட் சரவணன், ஷாம், ஆண்ட்ரியா ஜெர்மியா, சந்தோஷ் பிரதாப், பாயல் ராஜ்புத் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியாகி இருக்கும் திரைப்படம் ” லீடர் “.
அப்பா சக்தி வேல் ( லெஜன்ட் சரவணன் ), மற்றும் மகள் ஐரின் ( பேபி இயல்) இருவரும் தனியாக சந்தோஷமாக வாழ்ந்து வருகிறார்கள். சக்திவேலுக்கு மெக்கானிக் வேலை. ஊரில் இருக்கும் அத்தனை சொகுசுகர்களையும் பழுதுபார்க்கும் வேலை. அதில் சக்திவேல் ஹார்பரில் பெரிய ஆளாக இருக்கும் சால்ட் ( பிரபாகரன்) கொண்டு வரும் கார்களையும் பழுது பார்த்துக் கொடுப்பது சக்திவேலின் பிரதான வேலை. இதற்கிடையில் ஹார்பரில் மர்மமாக கண்டெய்னரில் ஏதோ இருக்கிறது என காவல்துறை அதிகாரி சந்திரா சத்தியமூர்த்திக்கு ( ஆண்ட்ரியா) தகவல் கிடைக்கிறது. அவருடைய தேடல் பல ஆபத்துகளை வரவழைக்க அதில் இன்னொரு அங்கமாக இணைந்து கொள்கிறார் காவல் துறை அதிகாரி பக்தவத்சலம் ஐபிஎஸ் ( ஷாம்) . ஒரு பக்கம் காவல்துறையின் தேடல் இன்னொரு பக்கம் தேவையே இல்லாமல் இந்த பிரச்சனைகளுக்குள் மாட்டிக் கொள்ளும் சக்திவேல் மற்றும் அவரது மகள் பின்னணி என்ன இதனை சக்திவேல் எப்படி கையாளுகிறார் என்பதுதான் மீதி கதை.

லெஜன்ட் சரவணன் முந்தைய படத்திற்கும் இந்த படத்திற்கும் நிறைய முன்னேற்றம். அவருடைய நடிப்பிலும் , தோற்றத்திலும் கூட இந்தப் படத்தில் எதார்த்தம் அதிகமாகவே தென்படுகிறது. இன்னும் முக உணர்வுகளை காட்டும் இடத்தில் மட்டும் சின்ன சின்ன பயிற்சிகள் எடுத்துக் கொண்டாலே போதும்.
ஆண்ட்ரியா மற்றும் ஷாம் இருவருமே துவக்கத்திலிருந்து நல்லவர்களா கெட்டவர்களா என்கிற சந்தேகத்தை கிளப்பும் அளவிற்கு அற்புதமாகவே தங்களது கதாபாத்திரத்தை செய்து இருக்கிறார்கள். குறிப்பாக ஷாம் கதாபாத்திரம் படம் முடியும் வரையிலுமே ஒருவித சந்தேகத்திலேயே பார்வையாளர்களை வைத்திருந்தது. சந்தோஷ் பிரதாப் ஸ்டைலிஷ் தோற்றம் இந்தப் படத்திற்கு இன்னொரு பலம். யாரும் எந்த கதாபாத்திரத்தையும் ஓவர் டோசாக கொடுக்காமல் அவரவர் வேலையை அளவாக செய்திருக்கிறார்கள்.

திரைக்கதையையும் பார்வையாளர்களை திருப்தி படுத்தும் அளவிற்கு புத்திசாலித்தனமாக உருவாக்கி இருக்கிறார் இயக்குனர் துரை செந்தில்குமார். பரபரப்பு, ஆக்சன், திருப்பங்கள் என அனைத்தும் ஏற்றுக்கொள்ளும்படி அமைத்திருக்கிறார். அதிலும் கண்டெய்னர் சேசிங் காட்சி படத்திற்கு பிளஸ். அதேபோல் சண்டைகளே இல்லாமல் ஒரு காட்சியில் வெறும் விடிவி கணேசன் முக உணர்வுகளை வைத்து மாஸ் காண்பித்திருப்பது துரை செந்தில்குமாரின் ஸ்பெஷல் டச் ரகம்.

வெங்கடேஷ் ஒளிப்பதிவில் ஆக்சன் அதிரடி காட்சிகளும் ஹார்பர் காட்சிகளும் நிச்சயம் பார்வையாளர்கள் பலரையும் அடுத்து என்ன என யோசிக்க வைக்கிறது. படத்திற்கு இன்னொரு மிகப்பெரிய பலம் ஜிப்ரானின் இசை. அதிலும் இடைவேளை காட்சியிலும் படம் முடியும் தருவாயிலும் பயன்படுத்தப்பட்ட மொமண்ட் பாடல் நம்மையும் மீறி கைதட்ட வைத்து விடும்.

ரகசிய உளவாளி, சீக்ரெட் மெஷின் இதில் எல்லாம் லெஜன்ட் அண்ணாச்சியை இயக்குனர் எப்படி யோசித்தார் என நினைப்பதற்கு பதிலாக இருக்கிறது முழு படமும். பல இடங்களில் அனிமேஷன் காட்சிகளை வைத்து காமிக்ஸ் ஸ்டைலில் காட்சியை உருவாக்கியது சாணக்கியத்தனம்.

மொத்தத்தில் லெஜன்ட் சரவணன் முந்தைய படத்தில் எதிர்கொண்ட அத்தனை எதிர்மறை விமர்சனங்களையும் இயக்குனர் துரை செந்தில்குமாரின் உதவியுடன் இந்த ” லீடர்” படத்தில் தவிடு பொடியாக்கி இருக்கிறார்.
Rating: 



(3/5)











