மேட் இன் கொரியா திரை விமர்சனம்
Published பங்குனி 14, 2026 by Natarajan Karuppiah

கனவுகள் ” மேட் இன் கொரியா” !
ரைஸ் ஈஸ்ட் என்டர்டைன்மென்ட் தயாரிப்பில் ரா. கார்த்திக் இயக்கத்தில் பிரியங்கா மோகன், ரிஷிகாந்த், உள்ளிட்ட கலர் நடிப்பில் வெளியாகியிருக்கும் திரைப்படம் ” மேட் இன் கொரியா” . நேரடியாக நெட்பிளிக்ஸ் தளத்தில் வெளியாகி இருக்கிறது.
ஊட்டியில் ஒரு மலை கிராமம் அங்கே சிறு வயது முதலே கொரியா நாட்டிற்குச் செல்ல வேண்டும் என்கிற கனவுடன் வளர்கிறார் செண்பகம் ( பிரியங்கா அருள் மோகன்) . உடன் அவர் பகுதியிலேயே இருக்கும் மணி( ரிஷிகாந்த்) மீது காதல். ஆனால் மணியோ ஏராளமான கடன் தொல்லைக்கு நடுவே வாழ்ந்து கொண்டிருக்கிறார். ஒரு பக்கம் செண்பகத்திற்கு வீட்டில் மாப்பிள்ளை பார்க்கத் தொடங்கி விடுகிறார்கள். காதல், கடன் மற்றும் கொரியா கனவு என செண்பகம், மற்றும் மணி இருவரும் கொரியாவிற்கு சென்று விடலாம் என திட்டமிடுகிறார்கள். இதற்கிடையில் மகள் மீது கோபப்பட்ட செண்பகத்தின் அப்பா , கொரியா செல்வதற்காக செண்பகம் வங்கியில் கடன் கேட்டிருந்ததாகவும் அந்தப் பணம் வந்து விட்டதாகவும் சொல்லி கொடுத்துவிட்டு செல்கிறார்.

உங்கள் மகள் உங்களை பார்க்க விரும்பவில்லை, எனவே என்னிடமே பணத்தைக் கொடுத்து விடுங்கள் என மணி பணத்தை வாங்கிக் கொள்ள, இருவரும் கொரியா செல்லலாம் என முடிவெடுக்கிறார்கள். ஆனால் கொரியா செல்லலாம் என அனைத்து திட்டங்களும் செய்துவிட்டு , அவரை மட்டும் விமானத்தில் ஏறச் செய்துவிட்டு, தான் பணத்துடன் வேறு ஒரு ஊருக்குச் சென்று விடுகிறார் மணி. ஏமாற்றத்தில் மனமுடைந்து, தன்னந்தனியாக மொழி தெரியாத கொரியா நாட்டில் வந்து இறங்குகிறார் செண்பகம். அதன் பிறகு அங்கே என்ன நடக்கிறது செண்பகம் கொரியா நாட்டில் எப்படி சமாளிக்கிறார் என்பதுதான் மீதி கதை.

பிரியங்கா மோகன், ஊட்டி பொண்ணு , ஸ்வட்டர் சகிதமாக கண்களில் கனவுகள் என பளிச்சென மின்னுகிறார். ஆனால் நடிப்பில் தான் இன்னமும் முன்னேற்றம் தேவை. உணர்வுகள் சூழ நடிக்க வேண்டிய சில இடங்களில், இன்னும் மெனக்கெட வேண்டும். ஆனால் கைவிடப்பட்ட அப்பாவி பெண்ணின் கதாபாத்திரத்திற்கு பிரியங்கா மிகப் பொருத்தமான தேர்வு.
முக்கிய கவனம் பெறுகிறார் பார்க் – ஹை – ஜின் என்னும் கொரியா பெண்மணி. படம் முழுவதும் உணர்வுகளால் நம்மை கடத்திச் செல்கிறார் . சொந்தக் காலில் நிற்பதற்கும் பிடித்ததை செய்வதற்கும் வயது ஒரு தடை இல்லை என காட்டும் கதாபாத்திரத்தில், உலகப் பெண்களின் அடையாளமாக தெரிகிறார் . மனிதாபிமானமும் நட்பும் கிடைக்க மொழி ஒரு தடையே கிடையாது என்பதை படம் முழுக்க எடுத்து வைத்திருக்கிறார். இயக்குனர் ரா. கார்த்திக்.

பிரசன்ன குமார் ஒளிப்பதிவில் முழு கொரியாவையும் பொறுமையாக சுற்றிக் காட்டி இருக்கிறார்கள். நிச்சயம் படம் முடிந்த பிறகு சர்வதேச சுற்றுப்பயணம் செல்லும் பட்டியலில் நிச்சயம் எல்லோரும் கொரியா நாட்டையும் சேர்த்துக் கொள்வர். ஏனெனில் கொரியா நாட்டின் சுற்றுலாத்தலங்களை தாண்டி, அங்கே இருக்கும் மனிதர்களை படம் பிடித்து காட்டியிருக்கிறார், பிரசன்னா குமார் மற்றும் இயக்குநர் கார்த்திக் குழு. அந்தோணியின் எடிட்டிங் , படத்தின் நீளத்தை குறைத்து சட்டென இறுதிக்காட்சிக்கு கொண்டு வந்து விடுகிறது.
அந்த படத்திற்கு மூன்று பேர் இசையமைத்திருக்கிறார்கள். ஹேஷம் அப்துல் வஹாப், சைமன் கே கிங், தரண் குமார் மூவரும் முத்தான மூன்று பாடல்களை கொடுத்திருக்கிறார்கள். தரண்குமார் பின்னணி இசை, மனதை லேசாக்கும் கதை களத்திற்கு மேலும் அழகு சேர்த்திருக்கிறது.

இசைக்குழுவின் ரிசல்ட் என்ன? பிரியங்கா மோகன் அடுத்து என்ன செய்கிறார் போன்ற தகவல்கள் கொஞ்சம் சேர்த்திருக்கலாம்.
மொத்தத்தில் பெண்ணின் கனவை மதித்து அவள் விருப்பப்படி வாழவிட்டால் அவளைச் சார்ந்த பலரும் சேர்ந்து வாழ்வார்கள் என்னும் மிக அற்புதமான கருத்தை எடுத்து வைத்த விதத்தில் “மேட் இன் கொரியா ” மகளிர் தின மாதமான மார்ச் மாத சிறப்பு படமாக கவனம் பெறுகிறது.
Rating: 



(2.75/5)












