Download App
கர

Kara

Cast: Dhanush, Mamitha Baiju, K.S. Ravikumar, Karunas, Jayaram, Prithvi Pandiarajan, Suraj Venjaramoodu, M.S. Baskar, Sreeja Ravi

Director: Vignesh Raja

Music Director: GV Prakash Kumar

Producer: Dr. Ishari K. Ganesh

Banner: Vels Film International

Release Date: April 30, 2026

கர திரை விமர்சனம்

Published சித்திரை 30, 2026 by Natarajan Karuppiah

“கர”: ஒட்டுமொத்த எளியவர்களின் குரல்!

வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் மற்றும் திங்க் ஸ்டுடியோஸ் தயாரிப்பில் ரெட் ஜெயன்ட் மூவிஸ் வழங்கும் இயக்குநர் விக்னேஷ் ராஜா இயக்கத்தில் தனுஷ், மமிதா பைஜு, சுராஜ் வெஞ்ஞாரமூடு, கருணாஸ், கே.எஸ். ரவிக்குமார், எம். எஸ்.பாஸ்கர், ஜெயராம், பிரித்வி பாண்டியராஜ் , நடிப்பில் வெளியாகியிருக்கும் படம் ” கர ” .

திருவெரம்பூர் பகுதி எம்எல்ஏ வீட்டில் திருட இறங்குகிறார்கள் கரசாமி என்கிற கர ( தனுஷ்) மற்றும் அவரது கூட்டாளி மற்றும் மச்சினன் முருகேசன் ( பிருத்வி ராஜன்) எதிர்பாரா விதமாக அதில் கர கையும் களவுமாக மாட்டிக் கொள்ள, முருகேசன் தப்பித்து விடுகிறார். இந்த குற்றத்தை விசாரிக்க வருகிறார் டிஎஸ்பி வரதன் ( சுராஜ் வெஞ்ஞாரமூடு). தன்னுடைய பணி ஓய்வு நெருங்கி வரும் நிலையில் ஒரு பிரபலமான வழக்கை முடித்துவிட்டு பணி ஓய்வு பெறலாம் என நினைக்கிறார். அதனால் நடந்த திருட்டை இன்னும் ஜோடித்து எழுதுகிறார். நடப்பதைப் புரிந்துகொண்டு அங்கிருந்து தப்பிக்கிறார் கர. இனி திருட்டே வேண்டாம் என மனைவி செல்லியுடன் ( மமிதா பைஜு) ஆந்திரா ரேணிகுண்டாவில் ஒதுங்கி வாழ்ந்து வருகிறார். எனினும் வறுமை வாட்டுகிறது. இருவரும் இணைந்து சொந்தமாக ஒரு சின்ன ஹோட்டல் துவங்கலாம் என முடிவெடுத்து அதற்கான வங்கி கடனுக்காக அலைகிறார்கள். ஆனால் எல்லா கதவுகளும் மூடி இருக்கின்றன. நகை அல்லது சொத்து இருக்கிறதா, பின்னணி என்ன எனக் கேட்கிறார்கள். அதனால் ஊரில் இருக்கும் தனது அப்பாவின் நிலத்தை வைத்து ஏதாவது செய்ய முடியுமா என முடிவெடுத்து ஊருக்கு வருகிறார்கள் கர மற்றும் அவரது மனைவி செல்லி. நினைத்து வந்தது ஒன்று நடந்தது வேறு என்பது போல் நிலம் வங்கியில் அடமானத்தில் இருக்கிறது. இடையில் காவல்துறையின் தேடல் ஒரு பக்கம் நடந்து கொண்டிருக்கிறது. இதற்குப் பிறகு கரசாமி என்ன முடிவெடுத்தார், அவருடைய வாழ்க்கை என்ன ஆகிறது என்பது மீதிக்கதை.

தனுஷ் எப்போதும் போல் இப்பவும் அவருடைய பெஸ்ட் கொடுத்திருக்கிறார். அதிலும் இந்த கதாபாத்திரம் இயல்பிலேயே ஒரு எதிர்மறை முகம் கொண்டது. இந்த கதையை கேட்டு அப்படியே கதாபாத்திரத்தை ஏற்று நடித்தமைக்கு பாராட்டுக்கள். ஏனெனில் படம் முழுக்க நீங்கள் ஒரு தேடப்படும் திருடன் என்றால் நிச்சயம் உச்சத்தில் இருக்கும் நடிகர்கள் ஒப்புக்கொள்ள மாட்டார்கள். அந்த வகையில் கதைக்கும் கதாபாத்திரத்திற்கும் நியாயம் சேர்த்திருக்கிறார் தனுஷ்.

மமீதா பைஜூ படத்தில் அவருக்கு திரை நேரம் மிக குறைவுதான். ஆனால் வரும் சில நிமிடங்களும் நம் மனதில் நிறைகிறார். டாம் கேர்ள், ஜாலி ஜென் Z பெண்ணாக வந்து கொண்டிருந்தவருக்கு இந்த படம் முற்றிலும் வித்தியாசமான கேரக்டர் கொடுத்திருக்கிறது. அடுத்து மனதில் நிற்கிறார் சுராஜ் வெஞ்ஞாரமூடு, பிரபலமாக ஏங்கும் ஒரு காவல் அதிகாரி உடல் மொழியை அப்படியே கொடுத்திருக்கிறார். கண்ணாடியில் பார்த்து தனது சிரிப்பை உறுதி செய்வது, பிடித்த குற்றவாளியை விட்டுவிட்டு புகழுக்காக செய்தி உருவாக்குவது என கதையில் தனித்துவம் பெறுகிறார். அடையாளமே தெரியாமல் கதாபாத்திரமாகவே படம் முழுக்க வலம் வருகிறார் எம்.எஸ். பாஸ்கர். ஜெயராம், கருணாஸ் காம்போவில் ஒரு சில காட்சிகள் கதையின் தீவிரத்தையும் மீறி நம்மை சிரிக்க வைக்கின்றன. கே.எஸ். ரவிக்குமார் வரும் காட்சிகள் கொஞ்சம் நீளம் என்றாலும் எதார்த்தமான கதைப்போக்கில் பெரிதாக உறுத்தவில்லை.

” போர் தொழில் ” போன்ற சீட்டு நுனிக்கு இழுத்து வந்த ஒரு படத்தை கொடுத்த இயக்குனர் அடுத்து என்ன கொடுக்கப் போகிறார் என்கிற கேள்விக்கு சிறப்பான பதில் கொடுத்திருக்கிறார். கிரைம் திரில்லர் என்றாலும் சரி, ஒரு திருட்டு சார்ந்த கதை என்றாலும் சரி திரைக்கதையில்தான் உயிர் இருக்கிறது என மீண்டும் நிரூபித்திருக்கிறார் விக்னேஷ் ராஜா. அதிலும் ஒரு வங்கிக்குள் வந்த போலீஸ் நகராமல் நிற்கும் பொழுது பார்வையாளர்கள் ” நகருய்யா” என கத்துவது கதைக்குள் ஒன்றி இருப்பதை காட்டுகிறது.

படத்திற்கு மிகப்பெரிய பலம் பின்னணி இசை. மற்றும் பாடல்கள். ஜிவி பிரகாஷ் , எப்படி எப்போதும் தன்னை டிரெண்டில் வைத்துக் கொண்டிருக்கிறார் என்பதுதான் தெரியவில்லை. ” வாயா என் கர சாமி” வைப்ரேஷன் ரகம், ” கண்ணம்மா என் கண்ணம்மா ” பிளே லிஸ்ட் ரகமாக ஈர்க்கிறது. பல காட்சிகளில் பின்னணி இசையால் ஆடியன்ஸ் பல்ஸ் ஏற்றுகிறார். தேனீ ஈஸ்வர் பிறந்து வளர்ந்த மண்ணில் நடக்கும் கதை, மேலும் அந்த குறிப்பிட்ட காலகட்டத்தில் அவரும் வாழ்ந்தவர் என்பதால் இன்னும் உண்மையான காட்சிகளாக சினிமோட்டோகிராபி திரைக்கதைக்கு உயிர் கொடுத்திருக்கிறது. தென் தமிழக பொட்டல் பூமி, நீருக்கு ஏங்கும் தரிசு நிலம், வாடி வதங்கிய எளியவர்களின் உடல் உட்பட அற்புதமாக காட்சிப்படுத்தப்பட்டிருக்கிறது. எடிட்டர் ஶ்ரீஜித் சாரங் முதல் பாதியை அவ்வளவு விறுவிறுப்பாக தொகுத்துக் கொடுத்திருக்கிறார். இரண்டாம் பாதியில் சின்ன சின்ன நீளங்களை கத்தரித்தால் இன்னும் ஷார்ப்பாக இருக்கும்.

மொத்தத்தில் ஓரிரு நாட்களாக ஒடிசாவின் ஜித்து முண்டா தனது சகோதரியின் எலும்புக்கூட்டை தோளில் சுமந்து திரிந்த வீடியோ இந்தியா முழுக்க வைரலாகி அதிர்வலைகளை ஏற்படுத்தியது. அப்படி எத்தனையோ எளியவர்கள் இன்றைக்கும் வங்கிகளின் பிடியில் சிக்கி இருக்கிறார்கள். அவர்களை எல்லாம் நினைவு கூறும் வகையில் எளிய மனிதர்களின் குரலாக மாறி இருக்கிறது ” கர ” திரைப்படம்.

Rating: (3.5/5)

[lai_inner_right_top]

More News

No categories found.